இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இரண்டாவதாக சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது. ஹீரோ டீஸர் வெளியான பின்பு, இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குனர் மித்ரன் ‘ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி போஸ்கோ பிரபுவுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் எழுதிய கடிதத்தில் கதை திருட்டு நடந்திருப்பது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், “இயக்குனர் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்தின் டீஸர் மற்றும் விளம்பரங்களைப் பார்த்தேன். அந்தப் படத்தின் கதை, நம் எழுத்தாளர் சங்கத்தில் நான் 26.04.2017 அன்று பதிவு செய்து வைத்துள்ள அதே கதைதான். எனவே, என் கதைக்கு உண்டான நியாயம் வழங்க வேண்டும்'' என்று கோரி 29.10.2019 தேதியில் ஒரு புகாரை நமது சங்கத்தில் தந்தீர்கள்.
அதன்படி, நான் கதைச் சுருக்கத்தை மட்டும் தங்களிடம் கேட்டு வாங்கிக்கொண்டு, டைரக்டர் மித்ரனிடம் 'ஹீரோ' படத்தின் கதைச் சுருக்கத்தையும் எழுதித் தரச் சொல்லி, அதை வாங்கி ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த ஒப்பீட்டுப் பணியை நான் மட்டுமின்றி, நமது சங்கத்தின் முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரிடமும் தரப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
அந்த 18 உறுப்பினர்களும் பல படங்கள் இயக்கிய, பல படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய திறமைமிக்க அனுபவசாலிகள். அவர்கள் அனைவரும் படித்தபின், தங்கள் கதையும், டைரக்டர் மித்ரனின் ஹீரோ கதையும் ஒன்றுதான் என எல்லோரும் கருத்து வேறுபாடின்றி ஒரே முடிவாகக் கூறினார்கள். எனது கருத்தும் அதே என்பதால் மித்ரனை நான் எனது அலுவலகத்துக்கு வரவழைத்தேன்.
'ஆரம்பத்தில் ஃப்ராடு வேலைகள் செய்யும் ஹீரோ- ஆராய்ச்சியில் தங்கை- அவளது கண்டுபிடிப்பு- கண்டுபிடிப்பை காப்புரிமை பெற்றுத் தருவதாகக் கூறிய வில்லன் பின் மோசடி செய்வது- தங்கை மேல் பழிசுமத்தி அதனால் கைது- பின் விடுதலை- ட்ரெயினில் விரக்தியுடன் திரும்புதல்- பின் தற்கொலை- பொங்கியெழும் ஹீரோ- போராடி வில்லன் செய்த மோசடியை அம்பலப்படுத்தி தங்கையின் பெயரை நிலைநாட்டுதல்' என்பதே கதைச் சுருக்கமாக இருந்தது.
கதை, திரைக்கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதலின்படி, இரண்டு கதைகளிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை இவ்வளவு ஒற்றுமைகள் இருப்பதாய் மொத்த உறுப்பினர்களும் கருதுகிறார்கள் என்ற விவரத்தை இயக்குநர் மித்ரனிடம் கூறினேன். ஆனால், அவர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பிட்டுப் பார்த்த 18 செயற்குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, அவர்களின் விளக்கத்தைக் கூற வேண்டும் என்று கேட்டார்.
அதன்படியே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இயக்குநர் மித்ரனின் கருத்தை யாரும் ஏற்க மறுத்து இரண்டு கதையும் ஒன்றுதான் என ஆணித்தரமாகக் கருத்து கூறினர். அதன்பின் அனைவரும் என்னிடம் 'ஹீரோ' படத்தில் போஸ்கோ பிரபுவான தங்களுக்குக் கதைக்கான பெயரும், இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர வலியுறுத்தினார்கள்.
'சர்கார்', 'கோமாளி' படங்களுக்கு இதே பிரச்சினை வந்தபோது என்ன நியாயம் வழங்கப்பட்டதோ, அதையே இதிலும் தீர்ப்பாக வழங்க முடிவெடுத்து இயக்குனர் மித்ரனுக்கு 22.11.2019-ல் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் இயக்குனர் மித்ரன் பொறுப்பான பதில் அளிக்காமல் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்ததோடு, நீதிமன்றத்தின் மூலம் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்க உங்கள் மீது கேவியட் எடுத்து, எங்களுக்கு அதன் பிரதியை அனுப்பியிருந்தார்.
சங்கத்தை மதிக்காமல் மித்ரன் எடுத்த இந்த நடவடிக்கை சங்கத்துப் பொறுப்பாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை சங்கத்துக்கான பெரிய அவமதிப்பாக நினைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்குள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி, உங்கள் பக்கமுள்ள நியாயத்தைக் கோரி நீதிக்குப் போராட விரும்புவதாக தெரிவித்தீர்கள்.
நமது சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிபடக் கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்து கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.