வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் நாயகன் அசோக் செல்வனை நக்கீரன் ஸ்டுடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் மன்மத லீலை திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”நான் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தீவிரமான ரசிகர். அவர் கால் செய்து ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டபோது ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. சென்னை-28 படம் பார்த்துவிட்டு யாருடா இந்த டீம் என்று நினைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட இயக்குநரின் படத்தில் நடித்தது என்பது கனவு நனவானதுபோல உள்ளது.
ட்ரைலர் பார்த்துவிட்டு இந்த மாதிரி படமும் நடிக்கிறீயாடா என்று நண்பர்கள் கிண்டலாகக் கேட்டனர். 40 வயதுக்கு மேல் உள்ள சிலர்தான் ஏன் இந்த மாதிரி படமெல்லாம் நடிக்கிற என்று கேட்டார்கள். படத்தில் முகம் சுழிப்பது மாதிரி எந்தக் காட்சியும் இருக்காது. கதைக்கு தேவைப்பட்டதால் சில விஷயங்கள் செய்திருக்கிறோம். படத்திற்கு ஏ சான்றிதழ்தான் கொடுத்திருக்கிறார்கள். அதனால் இது குழந்தைகளுக்கான படமோ அல்லது குழந்தைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று நினைக்கும் பூமர் அங்கிள்ஸ்களுக்கான படமோ கிடையாது.
ட்ரைலரிலேயே இப்படி இருக்கிறதே, படம் எப்படி இருக்கும் என்று நினைத்து வந்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். ட்ரைலரில் என்ன இருக்கிறதோ அதே அளவில்தான் படத்திலும் இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை நிறைந்த காமெடி படமாக இருக்கும். நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் மச்சான் இது உன் கதைதான் என பொருத்திப் பார்க்ககூடிய வகையில் இருக்கும்”. இவ்வாறு அசோக் செல்வன் தெரிவித்தார்.