அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. ஏ.வி.எம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸ் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி இன்று திரையிடப்பட்டது.
பின்னர் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரியாணி போடுவது, ரசிகர்களைச் சந்திப்பது மாதிரியான காட்சிகள் நடிகர் விஜய்யை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் இருக்கிறதே எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இயக்குநர் அறிவழகன், “அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. அப்படிப் பார்த்தால் பிரியாணி என்றாலே அஜித் சார்தான் நினைவுக்கு வரும். அவர்தான் எல்லோருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெருந்தன்மையாக பிரியாணி போடுவார் என்பார்கள்” எனக் கூறினார்.
இந்தக் கேள்வியெழுப்பியதும் சுதாரித்த அருண் விஜய், ”அப்படியெல்லாம் யாரையும் கலாய்க்கவில்லை. நீங்களா நினைக்கக்கூடாது” என விளக்கமளித்தார்.