Skip to main content

'குற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்...' - அருண் விஜய் விளக்கம் 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019
arun vijay

 

'தடம்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் இதற்காக தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவர் இதுகுறித்து பேசும்போது...

 

 

"குற்றம் 23' படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை. அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி. இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது. குற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், குற்றம் 23 மருத்துவத்துறையை மையமாக கொண்ட ஒரு திரில்லர். ஆனால் இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றியது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்து வருகிறார் இயக்குனர். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்" என்றார். அருண் விஜய் தற்போது கொல்கத்தாவில் அக்னி சிறகுகள் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி இன்னொரு கதாநாயகனாக நடிக்க, ஷாலினி பாண்டேவும் உடன் நடித்து வருகிறார். மேலும், குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாக கொண்ட 'பாக்ஸர்' திரைப்படத்தையும் மிக விரைவில் தொடங்க இருக்கிறார் அருண் விஜய்.

 

 

சார்ந்த செய்திகள்