அருண் விஜய் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு முன்பு கூறியதால் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது மனைவியுடன் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து கிரிவலம் வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மன நிம்மதியும் ஒரு தெளிவும் திருவண்ணாமலை அண்ணாமலையாரைப் பார்க்கும் போது கிடைக்கும். அதனால் அவரைப் பார்க்க காரணம் தேவையில்லை. எனக்கு தோன்றும் போதெல்லாம் வருவேன். என்னுடைய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திக்கிட்டு இருக்கு. ஏ.எல். விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படம் விரைவில் வெளியாகவுள்ளது. மீண்டும் திருவண்ணாமலை வர வேண்டிய சூழல் இருக்கு. ஏனென்றால் வணங்கான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இங்குதான் நடக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் நெருங்கி வருவதால் சொல்ல வேண்டிய விஷயமாக இருக்கு. இங்கே வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு சாமி பக்தி இருக்க வேண்டும். இறைவன் மீது ஒரு பயம் இருக்க வேண்டும். ஒரு தெளிவான முடிவு எடுப்பதற்கு இறை நம்பிக்கை இருந்தால் நல்லது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தானே. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வரலாம். புது ஆட்களும் வர வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பமும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வருபவர்களை நாம் வரவேற்க வேண்டும். விஜய் வருவதும் அப்படிதான். அதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதற்கு முன்பு அவர் அறிவிக்கட்டும். என்னுடைய அரசியல் பயணம் இப்போதைக்கு எதுவும் இல்லை. நடிப்பு பணிகளும் பொது பணிகளும் இருக்கு. அதனால் எதிர்காலத்தில் பார்க்கலாம்.
நடிகர் சங்க தேர்தலில் ஈடுபட நல்ல ஆட்கள் இருக்கிறார்கள். பெரியவர்கள் இருப்பதால் அவர்களை முன்னிறுத்தி அவர்களுடன் பக்கபலமாக நிற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நடிகர் சங்க கட்டிடம் குறித்து கார்த்தியிடம் பேசினேன். அடுத்த கட்டத்திற்கு செல்வதை நோக்கி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொன்னார். அநேகமாக கூடிய விரைவில் என்ன பண்ண உள்ளோம் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்" என்றார்.