அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் சாணிக்காயிதம் படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"என்னுடைய படத்தில் காட்டப்படும் வன்முறை முழுக்க முழுக்க சினிமாதான். ஒரு கதை சொல்லும்போது சில இடங்களில் வன்முறை தேவைப்படுகிறது. என்னுடைய இரண்டு படங்களிலும் அது தேவைப்பட்டது. அதற்காக என்னுடைய எல்லா படங்களும் அது மாதிரி இருக்காது.
நான் எடுத்துள்ள ராக்கி, சாணிக்காயிதம் எல்லோரும் பார்க்க கூடிய படம் அல்ல. அனைவரும் பார்க்க வேண்டும் என்று எடுத்த கதையும் அல்ல. அந்தப் படத்திற்கென்று சில ஆடியன்ஸ் இருக்காங்க. அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம். மற்றவர்கள் படம் பார்த்தால் நம்மை திட்டத்தான் செய்வார்கள்.
ராக்கி படத்தின் கதையையே செல்வராகவன் சாரிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அப்போது முடியவில்லை. ஆனால், அவரை நடிக்க வைக்க வேண்டும் என்பது மட்டும் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. இந்தப் படத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தது.
ட்ரைலரில் வரும் விசாரணை காட்சி படத்தில் இருக்காது. சென்சாரில் அதை எடுத்துவிட்டோம். எந்த படைப்பாளிக்குமே அவர் எடுத்த சீனை கட் செய்ய சொன்னால் அவர் விரலை கட் செய்வதுபோலத்தான் இருக்கும். இந்தப் படத்தை வயது வந்தவர்கள் மட்டும்தான் பார்க்க வேண்டும் எனக் கூறி ஏ சர்டிஃபிகேட் கொடுப்பதுவரை ஓகேதான். ஆனால், ஏ சர்டிஃபிகேட் கொடுத்த பிறகும் நீக்கச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இன்ஃபுளூயன்ஸ் ஆகக்கூடியவர்கள் எதைப்பார்த்து வேண்டுமானாலும் இன்ஃபுளூயன்ஸ் ஆவார்கள். ராக்கி படம் பார்த்துவிட்டு யாரும் சுத்தி எடுத்துக்கொண்டு கொலை செய்ய போகலையே. நான் எதை பார்க்கவேண்டும் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். இதை பார்த்தால் நீ இன்ஃபுளூயன்ஸ் ஆவாய் என்று மற்றவர்கள் சொன்னால் எனக்கு சுயபுத்தி இல்லையா?
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திறந்த மனதுடன் வந்து படம் பாருங்கள். படத்தில் வன்முறைக்காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். வன்முறை பிடிக்காது என்றால் இந்தப் படத்தை நீங்கள் பார்க்காமல் இருப்பதே நல்லது. ராக்கி படம் திரையரங்கில் வெளியானபோது பார்க்காதவர்கள், ஓடிடியில் பார்த்துவிட்டு இன்றும் பாராட்டுகிறார்கள். அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு ராக்கி படம் பிடித்திருந்தால் நிச்சயம் சாணிக்காயிதம் படமும் பிடிக்கும்". இவ்வாறு இயக்குநர் அருண்மாதேஸ்வரன் தெரிவித்தார்.