
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்று வந்ததாகவும், மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்க்குள்ளாக்கியது. ஆனால் அவரது மகன் ஏ.ஆர்.அமீன், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் பலவீனமடைந்தார் எனவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தனது சமூக வலைதளப்பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்.
பின்பு ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு நீரிழப்பு காரணமாக தங்கள் மருத்துவமனைக்கு வந்ததாகவும் வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தது. இதனை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து வாழும் அவரது மனைவி சாய்ரா பானு, அவருக்கு உடல்நலம் குணமடைய வேண்டுவதாகத் தெரிவித்து தன்னை அவரது முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “நாங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. ஆனால் பிரிந்து வாழ்கிறோம். மற்றபடி கணவன், மனைவி என்ற பந்தத்தில்தான் இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அது ரஹ்மானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக பிரிந்து வாழ்கிறோம். அதனால் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம் என மீடியாக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் 1995அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 30ஆண்டுகளை நெருங்கும் வேளையில், இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதன்படி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.