பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.
இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமீர் என்ற மகனும் கதீஜா, ரெஹிமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கும் தொழிலதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா மற்றும் ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரின் திருமணம் நேற்று எளிய முறையில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகள் கதீஜாவின் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் எல்லாம் வல்ல இறைவன் அவர்களை ஆசிர்வதிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்களோடு மறைந்த அவரது அம்மா கரீமா பேகத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மகளின் திருமணத்திலும் தாயை நினைவுகூறும் ஏ.ஆர் ரஹ்மானின் செயலுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், அவரது மகள் திருமணத்திற்கு வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர்.
May the Almighty bless the couple .. thanking you in advance for your good wishes and love🌹🌹💍🌻🌻 @RahmanKhatija #RiyasdeenRiyan #nikkahceremony #marriage pic.twitter.com/S89hM4IwCT— A.R.Rahman (@arrahman) May 5, 2022