பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக இந்தி நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக அவரது முன்னாள் இரண்டு மனைவிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அனுராக் காஷ்யப் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆவார். சில தினங்களுக்கு முன்னாள் அவருக்கு எதிராக இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் நேற்று ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், தற்போது அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனுராக் சமூக வலைத்தள சர்ச்சைகளை உங்கள் அருகே நெருங்க விடாதீர்கள். பெண் சுதந்திரத்திற்காக உங்கள் படங்கள் மூலம் குரல் கொடுத்திருக்கிறீர்கள், தொழில்முறை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் அதற்கான இடத்தை அளித்தவர் நீங்கள். நானே அதற்கான நேரடி சாட்சி. உங்களுக்கு இணையாக என்னைக் கருதினீர்கள். நம்முடைய விவாகரத்திற்குப் பின்னும் சில இடங்களில் எனக்காகக் குரல் கொடுத்தவர் நீங்கள். நம் திருமணத்திற்கு முன்பு என்னுடைய வேலை பார்க்கும் இடத்தில் நான் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த போது என் பக்கம் இருந்தீர்கள். விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான, அருவருப்பான செயல். இது குடும்பங்களை, நட்பைச் சிதைக்கிறது. இவைகளைத் தாண்டிய கண்ணியமான உலகம் ஒன்று இருக்கிறது. வலிமையாக இருங்கள். நீங்கள் செய்து வரும் வேலையைத் தொடருங்கள். உங்கள் முன்னாள் மனைவியிடமிருந்து". எனப் பதிவிட்டுள்ளார்.
டாப்ஸி, சயாமி உள்ளிட்ட நடிகைகளும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.