'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிவரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 'ஆர்.ஆர்.ஆர்' படம் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. மேலும், ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் எனவும் படக்குழு அறிவித்திருந்த நிலையில், எஞ்சியுள்ள பாடல்களில் ஒரு பாடலை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாகச் சமீபத்தில் புதிய தகவல் வெளியானது. இந்தப் படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் உக்ரைனிற்குச் செல்லவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது.
இதற்கிடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்காக நட்பைப் பற்றி விளம்பரப் பாடல் ஒன்றைத் திட்டமிட்டு படமாக்கியுள்ளார் ராஜமெளலி. இதனை தமிழில் அனிருத்தை பாட வைத்து ஒலிப்பதிவு செய்துள்ளார்கள். மேலும், இதுகுறித்து இசையமைப்பாளர் கீரவாணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்துக்காக அனிருத் உடன் ஒரு சிறப்பான அமர்வு. திறமை, ஆற்றல், செயல்திறன் மற்றும் ஒரு அற்புதமான குழு ஆகியவை அவரது சொத்து. அனைத்துக்கும் மேல் மிகுந்த பணிவு" எனக் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அனிருத், "அது என் கடமை சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் அன்பு" என்று ட்வீட் செய்துள்ளார்.