‘தாவணி கனவுகள்’ படத்தில் தொடங்கி ‘ஆளவந்தான்’, ‘தவசி’, ‘திமிரு’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘சிலம்பாட்டம்’,‘வீரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நம் மனதை கவர்ந்தவர் நடிகர் மயில்சாமி. இவரின் மகன் அன்பு மயில்சாமியை நக்கீரன் ஸ்டுடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் அப்பாவின் சினிமா வாழ்க்கை குறித்தும் தற்போது அவரின் சினிமா பயணம் பற்றியும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிந்து கொண்டார்.
கமல்ஹாசன் தான் அருமை நாயகம் என்ற பெயரை எனக்கு வைத்தார். அதன் பிறகு சினிமாத் துறையில் நுழைவதற்காக அவரிடம் ஆசிர்வாதம் வாங்கப் போனேன், அப்போது அவர் ‘குருவை மீட் பண்ணியான்னு’ கேட்டார். அதன் பின் ‘கே.பாலச்சந்தர் சாரை மீட் பண்ணிட்டு வா’ என்றார். அவரைச் சந்தித்த போது ‘சினிமாவில் இந்த பெயர்தான் வைக்கப் போறியா?’ எனக் கேட்டார் . அப்படி பேசிக்கொண்டே இருக்கும் போது ‘பெயர் ரொம்ப பெருசா இருக்கே’ எனச் சொன்னார். நான் அதற்கு ‘நீங்க ஒரு பெயர் வையுங்க சார்’ என்றேன். அதற்கு அவர் ‘போய்ட்டு மூனு நாள் கழிச்சி வா’ என சொல்லி விட்டார். மூன்று நாளைக்கு பிறகு அப்பாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவர் எனக்கு அன்பு மயில்சாமி என பெயர் வைத்தார். பிறகு ‘இந்த பெயரில் சினிமாவில் யாரும் ஹீரோ கிடையாது இதையே வைத்துக்கொள்’ என்றார். பெரிய பெரிய லெஜண்ட்டான ரஜினி, கமல் ஆகியோருக்கு பெயர் வைத்தவர் எனக்கும் பெயர் வைத்தார் என்பது சந்தோஷமாக இருந்தது” என்றார்.
“ஹைதராபாத்தில் நான் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அவர் அப்போது வீரம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார், அப்போதுதான் அவருக்கு முழங்காலில் ஆப்ரேஷன் நடந்திருந்தது. அப்போதும் கூட நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். பிறகு ‘என்னுடன் சூட்டிங் வரியா’ எனக் கேட்டார். அந்த இடம் அதிக தூரம் என்பதால் என்னால் செல்ல முடியவில்லை. அதன் பின்பு அவர் ‘நான் உனக்கு எல்லா ஏற்பாடு பண்ணி வைக்கிறேன் வந்திடு’ என்றார். நானும் அவரை மீட் பண்ண அனுமதி வாங்கிவிட்டு, அடுத்த நாளே அவரை சந்தித்தேன் அப்படித்தான் அந்த புகைப்படம் எடுத்தது. அதற்கு முன்பே அவரை ‘மங்காத்தா’ படப்பிடிப்பில் பார்க்கும்போது ‘டார்லிங் எப்படி இருக்கீங்க’ எனப் பேசினார், அதற்கு முன்பு ‘பரமசிவன்’ படப்பிடிப்பில் பார்க்கும்போதுதான் அவரும் பி.வாசுவும் சேர்ந்து என்னை சிலம்பம் பாண்டியன் மாஸ்டரிடம் பயிற்சிக்கு போகச் சொன்னார்கள். பி.வாசு எனக்கு மட்டுமில்லை என் அப்பாவுக்கும் அவர்தான் மெண்டார்”.
“முதலில் நானும் சிம்புவும் க்ளோஸாக இருந்தோம், அதன் பின்பு கம்யூனிகேசன் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது. இவரை எனக்கு எந்த விதத்தில் பிடிக்கும் என்றால் என்னால் எல்லாமே கற்றுக்கொள்ள முடியும் என்று ஒரு எக்ஷாம்பிளாக யாரை சொல்லுவார்கள் என்றால் சிம்புவைத்தான் சொல்லுவார்கள். அவருக்கு எல்லா விஷயமே தெரியும் எடிட்டிங், கேமரா,டைரக்ஷன், டான்ஸ்,மியூசிக் என அனைத்திலும் அவருக்கு அனுபவம் இருக்கிறது. அதையெல்லாம் அவரைப் பார்த்து நானும் ஃபாலோ செய்வேன். அவர் எதுவானாலும் நேரடியாக இருக்கக்கூடியவர். எங்க என்ன தோணுதோ அதை அப்படியே பேசி விடுவார். ஏமாற்றுவது, ஆளுக்கு ஏற்றதுபோல் பேசுவது, இப்போது அப்படி நிறைய பேர் உள்ளனர் சினிமாவிலும் சரி வெளியவும் சரி அப்படி பேசுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த மாதிரியெல்லாம் இவர் இல்லை எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசுவார் அதனாலயே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்று கூறினார்.
சிம்புவாக இருந்தாலும் நீங்களாக இருந்தாலும் சினிமா வாய்ப்பு ஈசியாக கிடைத்துவிடும் என்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீங்க? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் “முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். அடுத்ததாக தொடர்ந்து கம்யூனிகேசன்லயே இருக்கனும் . அப்படி இருந்தால்தான் நம்ம ஒரு துறையில் ட்ராவலாக முடியும். வெளியில் இருந்து உனக்கு என்னபா...அப்படிதான் பேசுவார்கள் ஆனால் எல்லாம் டைம்தான் சில பேர் கதை எழுதும்போது அவர்கள் நினைவில் வருபவர்களைத்தான் கூப்பிடுவாங்க. சில பேர் நியாபகம் வைத்து இந்த கேரக்டர் இவர் பண்ணட்டுமே என நம்மை கூப்பிடுவார்கள். சிலர் அவர்கள் கூட்பிடும்போது போகாமல் இருக்கலாம் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் கம்யூனிகேசனில் இருந்தால் அதைப் பார்த்து வாய்ப்பு வர ஈசியாக இருக்கும். இந்த விஷயத்தில் எங்க அப்பாதான் எனக்கு எக்ஸ்ஷாம்பிள்” என்று பதிலளித்தார்.
இதையடுத்து கமல்ஹாசனுக்கும் மயில்சாமிக்கும் இடையேயான உறவு குறித்த கேள்விக்கு அவர் “அப்பா கமல்ஹாசனுடன் தான் அதிக நேரம் இருந்தார். ஆரம்பத்தில் அவர் வெளியில் படப்பிடிப்புக்கு செல்லும்போது அப்பா அவருடனே போவார். அவர் வீட்டில் எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் இல்லை பத்திரிக்கையாளர் சந்திப்பாக இருந்தாலும் படம் சம்பந்தமான வேலையாக இருந்தாலும் அப்பா அங்கயேதான் இருப்பார். அங்கு என்ன நடந்தாலும் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்ன நிகழ்வாக இருந்தாலும் அப்பா அங்குதான் இருப்பார் அதுபோல எங்க வீட்டில் என்ன நடந்தாலும் அவரிடம்தான் முதலில் சொல்லுவார்”
“கடந்த வருடம் எனக்கு தனுஷின் அலுவலகத்தில் இருந்து கால் வந்தது. அவர் ஒரு படம் பண்ணுகிறார் அதில் உங்களுக்கும் ஒரு கேரக்டர் இருக்கிறது என்றனர். பிறகு தனுஷ் என்னை அழைத்து ராயன் படத்தில் ஒரு கேரக்டர் உள்ளது அதை பண்ணு, அடுத்ததாக எதாவது பெரிய படம் பண்ணாலாம் என்றார். அது எனக்கு பெரிய சப்போட்டாக இருந்தது. அப்பா இறந்து ஒரு மூன்று மாதத்தில் அடுத்து என்ன பண்ணப் போகிறோம் என நினைத்துக் கொண்டிருந்த போது தனுஷிடம் இருந்து எனக்கு கால் வந்தது ஆசிர்வாதம் தான். இது அப்பாவே ஏதோ வழி சொல்வது போல் இருந்தது” என்றார்.