கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கில் 'கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பு' ஒன்று திரையுலகப் பிரபலங்களின் நிதியுதவியோடு மெகா ஸ்டார் சிரஞ்சீவியால் தொடங்கப்பட்டு அதன் மூலம் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் சிரஞ்சீவியின் இந்த முயற்சியைப் பாராட்டி ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
”தெலுங்கு மாநிலங்களில் தினசரி கூலித் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக சிரஞ்சீவியைத் தலைவராகக் கொண்டு கரோனா க்ரைசஸ் சாரிட்டி என்ற கரோனா அறக்கட்டளை நிறுவப்பட்டது என்று எனக்குத் தெரியவந்தது. பல்வேறு பிரபலங்கள், நடிகர்கள், நல விரும்பிகளிடமிருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டு கிட்டத்தட்ட 12,000 தினக்கூலிப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கோ அல்லது தேவைப்பட்டால் இன்னும் அதிக நாட்களுக்கோ, அவர்கள் வீட்டுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களைத் தர இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், கரோனா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கும் என் வாழ்த்துகள். அற்புதமான சேவையைத் தொடருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.