உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேலானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேரக்கூடாது என்று அறிவுருத்தப்படுகிறது. அமேரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிட்டார் பிரதமர் மோடி. அப்போது, மக்களுக்காக அயராது பணிபுரியும் மருத்துவர்களுக்கும் காவல்துறையினர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று மாலை ஐந்து மணிக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிக்கவும் சொன்னார். ஆனால், அதை பலரும் பல விதமாக புரிந்துக்கொண்டு வாட்ஸப்பில் வதந்தி பரப்பினார்கள். அதில் ஒருசிலர் வைரஸ் 14 மணிநேரம்தான் உயிருடன் இருக்கும், மாலை ஐந்துக்கு கைதட்டினால் வைரஸ் நம் உடம்பைவிட்டு நீங்கிவிடும் போன்ற கருத்துகளையெல்லாம் பதிவிட்டு, பகிர்ந்தனர். மேலும் சுய ஊரடங்கு உத்தரவின் முக்கியத்தை அறியாத பல மக்கள் ஐந்து மணிக்கு கூட்டம் கூட்டமாக பேரணி போல கிளம்பி மகிழ்ச்சியடைந்தனர். இது உலகளாவிய அளவில் முட்டாள்தனமான செயல் என்று விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (23.03.20) அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ‘மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணி, ‘அமாவாசை’ என்று அழைக்கப்படும் மாதத்தின் இருண்ட நாள், வைரஸ், பாக்டீரியா தீய சக்திகள் அதீத சக்தியுடன் இருக்கும். அப்போது கைதட்டுவதால் ஏற்படும் அதிர்வுகள் வைரஸ் தாக்கத்தைக் குறைக்க உதவும். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த பதிவோடு மூன்று கேள்விக்குறிகள் போடப்பட்ட தன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் மூலம் அமிதாப்பை பலரும் கடுமையாக கேலி செய்துவருகின்றனர். இது அமிதாப்பின் கருத்தா அல்லது அவரும் அந்த விஷயத்தை கேலி செய்து பதிவிட்டிருந்தாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பினர். கடைசியில் அமிதாப் பச்சனே அந்த பதிவை நீக்கிவிட்டார்.