உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து திடீரென பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இந்த வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸடாரான அமீர்கான் வீட்டில் பணிபுரியும் ஒருவருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமீர்கானுக்கும் கரோனாவா என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரப்ப தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமீர்கான். அதில், “என்னுடைய பணியாளர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை அடுத்து பணியாளார் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பி.எம்.சி.-க்கு (பிரிஹான் மும்பை கார்பரேஷன்) நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
மீதமுள்ளவர்கள் அனைவருக்கும் கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, ரிஸல்ட் நெகட்டிவ் என்று வந்துவிட்டது.
தற்போதுதான் எனது அம்மாவுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த லூப்பில் கடைசி ஆள் அவர்தான். அவருக்கு நெகட்டிவ் வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். கோகிலாபென் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மற்றும் செவிலியர்களுக்கு மிகப்பெரிய நன்றி” என்று தெரிவித்துள்ளார்.