Skip to main content

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த அமீர்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
ameer thanked suriya regards mounam pesiyadhe 21yrs complete

அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் மௌனம் பேசியதே. அபராஜித் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நந்தா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பின்பு தெலுங்கில் ரீமேக்கானது. இப்படம் மூலம் அமீர் இயக்குநராக அறிமுகமானதும் த்ரிஷா கதாநாயகியாக உருவானதும் நினைவுகூரத்தக்கது. 

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர்- நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக மௌனம் பேசியதே ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்