இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'தமிழ்க்குடிமகன்'. லக்ஷ்மி க்ரியேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய அமீர், "சாதி இன்றைக்கு மேலோங்கி நிற்பதற்கு காரணம் அரசியல் தான். ஆனால் எனக்கு முன்னே பேசியவர்கள் அரசியல் தான் சாதியை உருவாக்கியது என்று சொன்னார்கள். அதில் எனக்கு ஒரு முரண் இருக்கு. சாதியை உருவாக்கியது சனாதனம். சாதியைப் பிடித்து கொண்டிருப்பது அரசியல். அதனால் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்றால் ஒரு சினிமாவால் முடியுமா என்று கேட்டால் சினிமா சாதியை ஒழித்துவிடாது, இதன் மூலம் பேசப்படுகின்ற விவாதம் மூலமாக எல்லாருடைய கை இணைந்துவிடும். அது ஒரு புதிய அரசியலை தேர்ந்தெடுக்கும். அந்த அரசியல் தான் சாதியை ஒழிக்கும். அதனால் விவாதத்துக்கு சாதி ரொம்ப அவசியமானதாக இருக்கு. அதன் அடிப்படையில் சினிமாவும் வேண்டும்.
ட்ரைலரில் சமூகநீதி பேசுவாங்க, நாங்க தான் படிக்க வச்சோம்னு சொல்வாங்க... என்று வசனம் வருகிறது. அதை பார்த்தவுடன் நான் கேட்டேன், திராவிடத்திற்கு எதிரான படமா என்றேன். எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு. நாங்க தான் படிக்க வைச்சோம் என சொன்னவர்கள் எல்லாருமே அவர்கள் தான் அதை செஞ்சாங்களா என்று தெரியாது. அவர்கள் வேண்டுமென்றால் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நாம் எல்லோரும் எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிச்சோம் என்று உணர வேண்டும் அல்லவா. அது ரொம்ப முக்கியமான கேள்வி. அதற்குள் ஒரு அரசியல் இருக்கு.
குருகுலத்தில் இருந்து, பாடசாலை, அரசு பள்ளிக்கூடமாக மாறி மைனாரிட்டி நிறுவனங்கள் அதிகமாக மாறி, இவ்வளவு விஷயங்களையும் தாண்டி வந்திருக்கோம். அதனால் பொதுவாக ஒரு குறையை சொல்லிடக்கூடாது. ஆனால் ஒழிக்கப்பட வேண்டியது இருக்கு. இங்கு எந்த பெருமையும் மனிதனுக்கு இருக்க வேண்டியதில்லை. அது குடி பெருமையாக இருக்கட்டும், குல பெருமையாக இருக்கட்டும், மொழி, சாதி, இனம்,மதம் என எதுவுமே தேவையில்லை. மனிதன் என்ற பெருமையோடு எல்லோரும் ஒன்றிணைந்து வாழுவோம். இந்த மண்ணில் தமிழராய் ஒன்றிணைந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம்" என்றார்.