தமிழில் விகடகவி, வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்களில் நடித்து அப்படங்கள் வெளிவரும் முன்னரே மைனா படம் மூலமாக பிரபலமானவர் அமலா பால். தமிழில் விஜய், ஜெயம்ரவி, விக்ரம், தனுஷ் ஆகியோருடன் நடித்து ஒரு வலம் வந்து கொண்டிருந்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடன் திருமணமாகி பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டார். மலையாளப் பின்னணியிலான குடும்பம் என்பதால் கேரளாவில் வசித்து வந்தார். சமீபத்தில் இவர் நடித்த டீச்சர் திரைப்படம் சமூக விழிப்புணர்வுமிக்க படமாக விமர்சனரீதியில் பாராட்டைப் பெற்றது.
இவர் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், 'மதப் பாகுபாடு' காரணமாக அவரை கோவிலுக்குள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லையாம். வளாகத்திற்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களைக் காரணம் காட்டி கோவில் நிர்வாக அதிகாரிகள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்ததாகவும், அதனால், தான் சாலையில் இருந்து கடவுளை தரிசனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அமலாபால் கூறியிருக்கிறார்.
மேலும், கோயில் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலாபால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “2023-ல் இன்னும் மதப் பாகுபாடு இருப்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் கடவுளின் அருகில் செல்ல முடியவில்லை. ஆனால், தூரத்தில் இருந்து கடவுளின் அருளை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும். மதத்தின் அடிப்படையில் அல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படுவோம்” என்று எழுதி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.