பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி, இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில், 'நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' என்ற பெயரில் 4 அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தில் கலாச்சார மையத்தை தொடங்கியுள்ளார். இதில் 2000 இருக்கைகள் கொண்ட அரங்கம், கலைநிகழ்ச்சிகளுக்கான அரங்கம், ஸ்டுடியோ போன்றவை இடம்பெற்றுள்ளன.
மும்பையில் அமைந்துள்ள இந்த கலாச்சார மையத்தின் தொடக்க விழா கடந்த 31.03.2023 அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சல்மான் கான், அமீர்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷ்ரத்தா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்துகொண்ட ரஜினிகாந்த், "இந்த அற்புதமான அரங்கில் நடிக்க வேண்டும் என்ற புது கனவு இப்போது உருவாகி இருக்கிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், பொன்னியின் செல்வன்-2 பணிகளால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான நேற்று நீதா அம்பானி மற்றும் இஷா அம்பானி இணைந்து இந்தியா இன் ஃபேஷன் என்ற நூலை வெளியிட்டனர். மேலும் நேற்று ராஷ்மிகாவும் ஆலியா பட்டும் சேர்ந்து ஆஸ்கர் வென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியிருந்தனர். ஏற்கனவே கடந்த 31.03.2023 அன்று நடந்த ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ராஷ்மிகா நடனமாடியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது ஆலியா பட்டுடன் இணைந்து ஆடிய வீடியோவும் வைரலாகி வருகிறது.