தமிழில் வெற்றிபெற்ற, 'காஞ்சனா' தொடர் படத்தின் முதல் பாகத்தை இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க, அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு, 'லக்ஷ்மி பாம்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்குத் தயாரக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. அதன்பின் இப்படம் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 9ஆம் தேதி நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் பெயர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. 'லக்ஷ்மி' என்ற இந்து கடவுளின் பெயரோடு 'பாம்' என்ற வார்த்தையைச் சேர்த்து வைத்திருப்பது, அக்கடவுளை அவமதிப்பதுபோல் உள்ளது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் இப்படத்தின் பெயர் லக்ஷ்மி என்று மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் 'பம் போலோ' என்னும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. உலுமனாட்டி என்பவர் இசையமைப்பில் உருவான இப்பாடலுக்காக நூறு திருநங்கைகளுடன் நடனம் ஆடியிருக்கிறார் அக்ஷய் குமார். இந்த விஷயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலிவுட்டில் இதுபோன்ற ஒரு முயற்சியை எடுக்கவே யோசிப்பார்கள் என்றபோது அதை சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரை வைத்து நடத்தி காட்டியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா இந்தப் பாடலுக்கு கொரியோகிராஃப் செய்திருக்கிறார்.