இந்தியாவின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் வரிசையாக ஒன்பது படங்களுக்கு மேல் நடித்து வந்தார். இந்த ஊரடங்கு சமயத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, அதில் 'லக்ஷ்மி பாம்' என்னும் படம் மட்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. 'சூர்யவன்ஷி' படம் தீபாவளி பண்டிகையின்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் தற்போதைய சூழலில் அக்ஷய்குமார் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவரைச் சந்திக்கப்போவதாக மும்பையில் இருந்து நாசிக்கிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கியும் உள்ளார்.
இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் நிருபர்களிடம் கூறுகையில், “அக்ஷய் குமாரின் ஹெலிகாப்டர் பயணம் ஊடகங்கள் மூலம் தான் எனக்குத் தெரியும். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு யார் சிறப்பு அனுமதி கொடுத்தது? ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு” என்று தெரிவித்தார்.