கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா 2வது அலை தீவிரமாகி வருவதால் நடிகர் அக்ஷய்குமார் ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதற்கு கவுதம் கம்பீர் நன்றி தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... “தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய்குமாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் கரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும் நடிகர் அக்ஷய் குமார் ரூ. 25 கோடி நிவாரண நிதியளித்தது குறிப்பிடத்தக்கது.