Skip to main content

4 சூப்பர் ஹிட்... 2 ஃப்லாப்... அடுத்தது என்ன? அஜித் - யுவன் காம்போ ஹிஸ்ட்ரி

Published on 05/03/2019 | Edited on 05/03/2019
ajith yuvan


தீனா... அஜித்திற்கென முறையான மாஸ் ஓப்பனிங் சாங்குடன் வந்த முதல் படம்   

பில்லா... அஜித் கேரியரிலேயே மிகவும் ஸ்டைலிஷான படம், இதன் தீம் மியூசிக் இன்றும் ஃப்ரெஷாக இருக்கிறது 

மங்காத்தா... அஜித்தின் 50வது படம். அஜித் படங்களிலேயே பெரிய ஹிட்டான தீம் மியூசிக் உள்ள படம் 
 

இப்படி அஜித் படம் என்றால் யுவனுக்கு ஸ்பெஷல். அஜித் படத்துக்கு இசை யுவன் என்றால் அஜித் ரசிகர்களுக்கு அது ரொம்ப ஸ்பெஷல். 2007ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் ஸ்டைலிஷ் படமாக வெளிவந்தது அஜித் நடித்த பில்லா. இதில் படம் மட்டும் ஸ்டைலிஷ் கிடையாது, படத்தில் வரும் பின்னணி இசை மற்றும் பாடல்களும்தான். இப்படத்தில் வரும் ‘பில்லா தீம்’ அப்போதிருந்த இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இளைஞர்கள் மட்டுமல்ல சினிமா வட்டாரங்களையும் என்றும் சொல்லலாம். பல புதிய இயக்குனர்கள் இதுபோல தீம் மியூசிக் நம் படத்திலும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ட்ரெண்ட் செட் செய்தது. பில்லா தீம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, அடுத்து வெளியாக இருந்த பல படங்களின் ஆல்பங்களில் ஒரு தீம் மியூசிக் தனியாகவே இருந்தது.

அமர்க்களம், அஜித்தின் 25வது படம். மாஸ் ஹீரோவாக அவர் மாறி வந்த காலம் என்றாலும் முழுமையாக ஒரு ஓப்பனிங் சாங், பின்னணி இசை என்று இருக்காது. ஆனால், தீனா படத்தில் யுவன் இசையில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ என்னும் ஓப்பனிங் சாங், கிட்டாரில் ரொமாண்டிக்காகத் தொடங்கி, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலில் ஒரு பைலா பாடலை போன்று அமைந்தது. அக்காலகட்டத்தில் டீக்கடைகளில் ஒலிக்கும் பாடலாகவும், ரசிகர்கள் தியேட்டரில் எஞ்சாய் செய்யும் பாடலாகவும் இருந்தது. படத்தில் பின்னணி இசையோடு கதாநாயகன் நடந்து வருவதைப் பார்த்தால், ரசிகனுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத பரவசம் ஏற்படும். இந்தப் படத்தில் ‘தினக்கு தினக்கு தின தீனா’ என்னும் பின்னணி இசையில் அஜித் கெத்தாக நடந்து வரும்போது முதல்முறையாக அஜித் ரசிகர்களுக்கு அந்தப் பரவசம் ஏற்பட்டது.
 

dheena



இவர்கள் இருவரும் மீண்டும் இணைய ஆறு வருடங்கள் எடுத்துக்கொண்டது. 2007ஆம் ஆண்டு பில்லா படத்தில் போடப்பட்ட பின்னணி இசை அஜித்தை மிக ஸ்டைலிஷாகக் காட்டியது. படம் முழுவதும் கோட் சூட்டில் ஒரு டானாக வரும் அஜித்திற்கு ஸ்டைல் சேர்த்ததில் யுவன் இசையின் பங்கு பெரியது. பாடல்கள் சுமார் ஹிட்டாகவும் பாடல்களைத் தாண்டி தீம் மியூசிக் சூப்பர் ஹிட்டான அதிசயம் இந்தப் படத்தில் நிகழ்ந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்த வருடமே 'ஏகன்' படத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்தனர். 'பில்லா' தாக்கத்திலிருந்து மீளாத ரசிகர்களுக்காக, அதைப் போன்றே ஸ்டைலிஷாக ஒரு படம் கொடுக்க வேண்டும் என்று எடுக்கப்பட்டிருந்தாலும், இதில் யுவனின் பின்னணி இசையும், பாடல்களும் நார்மலாகத்தான் இருந்தன. இந்த முறை இக்கூட்டணியின் மேஜிக் நிகழாமல் போனது, ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும், அதை மங்காத்தா படத்தில் பூர்த்தி செய்தனர்.

அஜித்தின் 50வது படம் 'மங்காத்தா.' வெங்கட் பிரபுதான் இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டவுடன் ரசிகர்கள் அனைவரும் இதில் யுவன் இசைதான் என்று அவர்களே உறுதியாக நம்பினார்கள். 'தீனா' படத்தில் அஜித்திற்கு கொடுத்த மாஸ், பில்லா படத்தில் கொடுத்த் க்ளாஸ் என்று அனைத்தும் கலந்து அஜித்தின் 50வது படத்தில் கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்பினார்கள். அதை நிறைவேற்றும் வகையில் படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் வரும் தீம் இசை வேர லெவல் ஹிட்டானது. அதுவரை பில்லா படத்தின் தீமையே அதிகம் பேசியவர்கள், இந்த மங்காத்தா தீம் வந்த பின்பு பில்லா தீமே ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவராலும் கொண்டாடப்பட்டது. படத்தின் திரைக்கதையோ எக்ஸ்பிரஸ் போல வேகமாக போய்கொண்டிருக்க, காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி, பில்டப் என்று முந்தைய படத்தில் விட்ட மேஜிக்கை பூர்த்தி செய்தனர். படத்தில் பின்னணி இசையோடு கதாநாயகன் நடந்து வருவதை பார்த்தால், ரசிகனுக்கு எதோ ஒரு பரவசம் ஏற்படும் என்று சொன்னேன் அல்லவா, அது இந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி மங்காத்தா தீம் இசைக்கும்போது ஏற்பட்டது. யுவன் அஜித் கூட்டணியில் ரசிகர்களுக்கு ஒரு படையல் என்றே சொல்லலாம்.

பில்லா படத்தின் பிரீக்குவலாக பில்லா 2, 2011ஆம் ஆண்டு வெளியானது. ஏற்கனவே பில்லா படத்திற்கு இசை அமைத்த யுவன்தான் இதற்கும் இசை அமைத்தார். பில்லா தீம், மங்காத்தா தீம் என்று இரண்டு மறக்கமுடியாத தீம்களை அஜித்திற்காகக்  கொடுத்தவர் இதிலும் ஒரு மாஸான தீமைக் கொடுத்து ரசிகர்களை குஷியடையச் செய்வார் என்று நினைத்தார்கள். ஆனால், ஏகன் படத்தில் பாடல்கள் எப்படி இருந்தனவோ அதைப்போலத்தான் பில்லா 2 வில் இருந்தன. ஆனாலும் 'இதயம் என் இதயம்' உள்ளிட்ட சில பாடல்கள் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இருக்கின்றன. இதனையடுத்து ஆரம்பம் படத்தில் அஜித்தும் யுவனும் இணைய, இவர்களுடன் பில்லா இயக்குனர் விஷ்ணுவும் இணைந்தார். ஆரம்பம் படத்திலும் தீம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 'அட ஆரம்பமே' என்னும் மாஸ் ஒப்பனிங் சாங்கே ரசிகர்களுக்கு கிடைத்தது. மற்றபடி இவர்களின் மேஜின் பெரிதாக இதில் வொர்க்கவுட்டாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


 

ajith kumar billa

 

மீண்டும் ஆறு வருட இடைவேளைக்குப் பின்னர் அஜித்தும் யுவனும் இணைந்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. ஹிந்தி படமான 'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. மொத்தமாக பிங்க் ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால், எந்தப் பாடலுக்கும் முக்கியத்துவம் கொண்ட படமில்லை இது. கிட்டத்தட்ட பாடல்களே இல்லாத படம் போலத்தான் இது. இது முழுக்க முழுக்க பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம். இதே கதைதான் என்றால் கண்டிப்பாக ஒரு தீனா ஆல்பமோ பில்லா ஆல்பமோ அஜித் ரசிகர்களுக்குக் கிடைக்காது. தமிழில் ஒரு வேளை ஏதேனும் மாற்றம் செய்வார்களா அல்லது ஹிந்தியில் இருப்பது போல பாடல்களை மாண்டேஜ்களாக வைத்து, பின்னணி இசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்று பார்ப்போம். இதுவரை ஆறு படங்களில் அஜித் - யுவன் காம்போ அமைந்திருக்கிறது. அதில் நான்கு வெற்றிகளும், இரண்டு தோல்விகளும் அடங்கும். 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இந்தக் கூட்டணியின் மேஜிக் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 


 

சார்ந்த செய்திகள்