மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான 'சில்லா சில்லா' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாடல் 'காசேதான் கடவுளடா' விரைவில் வெளியாகவுள்ளது. பொதுவாக, அஜித் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை என்றாலும் அவரது மேனஜர் சுரேஷ் சந்திராவின் ஐடி மூலமாக தனது படங்களின் அப்டேட், ரசிகர்களுக்கு அவர் சொல்ல விரும்புவது எனக் கூறி வருவார். அந்த வகையில் சுரேஷ் சந்திரா, அஜித்தின் பைக் பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "அஜித்குமார் தனது உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றாக (லெக் 1ஐ) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளார். அவர் இந்தியாவில் எங்கு பயணம் செய்தாலும் அவருக்குக் கிடைக்கும் அன்பு, அது ஒரு சாதனை. அனைத்து ரைடர்ஸுக்கும் இது ஒரு பெருமையான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக பைக்கில் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் அஜித், உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதனை உறுதி படுத்தும் வகையில் தற்போது சுரேஷ் சந்திரா பதிவு செய்துள்ளார். அஜித்தின் அடுத்த படம் அதாவது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு உலக பைக் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியாக முதற் சுற்றை முடித்துள்ள அஜித், தனது உலக பைக் பயணத்திற்கு பக்காவாக ப்ளான் போட்டு வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா முழுவதும் பயணத்தை முடித்துள்ள அஜித் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார். பொதுவாக பைக் பயணத்தின் போது அஜித்தின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும். அந்த வகையில் இந்தப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#AK has completed Leg 1 of his world tour by riding through all the states in India. Quite an achievement considering the love he gets wherever he travels in India! Proud moment for all adventure riders.— Suresh Chandra (@SureshChandraa) December 16, 2022