நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக ஐஸ்வர்யா வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை விசாரித்தனர். அதில் பணிப்பெண் ஈஸ்வரி திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர் வெங்கடேசனுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி அவர் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
மேலும் ஈஸ்வரியிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கிக் கணக்கில் அடகு வைத்துள்ளார்.
இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிய நிலையில் அவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த விசாரணையில் ஈஸ்வரியிடம் இருந்து மேலும் 43 சவரன் தங்க நகைகள் மீட்டெடுக்கப்பட்டது. இதனிடையே ஈஸ்வரியிடமிருந்து தங்க நகைகளை வாங்கிய குற்றத்துக்காக மயிலாப்பூரைச் சேர்ந்த அடகுக் கடைக்காரர் வினால்க் சங்கர் நவாலி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் குறிப்பிட்டதை விட அதிகமாக நகைகளை ஈஸ்வரியிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஐஸ்வர்யாவிடம் மொத்தம் எவ்வளவு நகைகள் திருடுபோயுள்ளது என போலிஸார் விசாரித்துள்ளனர். பின்பு தனது வீட்டில் நகைகள் உள்ள லாக்கரில் முழுமையாக ஆராய்ந்து மீண்டும் 2வது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், 200 பவுன் நகை கொள்ளை போனதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்போது இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர்.