ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதளவு பாராட்டப்பட்டதோடு, ரசிகர்கள் மத்தியில் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியுள்ள அம்மு படத்தில் நடித்துள்ளார். கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண், அவளின் வலியை கடந்து மற்றவர்களுக்கு அதை திருப்பி கொடுக்கும் வகையில் படத்தின் மையக்கரு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படம் வரும் 19 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறியதாவது, “அம்மு பல காரணங்களுக்காக எங்களுக்கு விஷேஷமானது. இது பெண்களின் வலிமை மற்றும் நெகிழ்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு முக்கியமான மற்றும் பொருத்தமான கதையாகும், புத்தம் புதுக் காலை மற்றும் மகானுக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜுடன் எங்களின் அடுத்த கூட்டணியையும் இது உறுதிப்படுத்துகிறது. எங்கள் முன்னணி நடிகர்களான ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோரின் அற்புதமான நடிப்பை அம்மு கொண்டுள்ளது. பிரைம் வீடியோவில், இந்தக் கதையை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.