சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜியால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக அவர் நடித்துள்ள 'குஷி' படம் நேற்று (01.09.2023) வெளியானது. இதைத் தாண்டி வருண் தவானின் 'சிட்டாடெல்' வெப் தொடரை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சமந்தாவிடம் பல வருடங்களாகப் பணியாற்றிய மேலாளர், சரியாக நிதியைக் கவனிக்காததால் ரூ.1 கோடி வரை சமந்தாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மேலாளர் குறித்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் முன்னதாகவே சமந்தாவிடம் எச்சரித்துள்ளார்களாம். நீண்ட ஆண்டுகளாகத் தன்னிடம் வேலை பார்த்த ஒருவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது சமந்தாவிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவருக்கு பதில் தற்போது புது மேலாளர் ஒருவரைத் தேடி வருகிறாராம் சமந்தா.
கடந்த மாதம் தசை அலர்ஜி பாதிப்பால், அதன் சிகிச்சைக்காக ஒரு முன்னணி தெலுங்கு நடிகரிடம் ரூ. 25 கோடி கடன் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியான வேளையில் அதனை முற்றிலும் மறுத்து, “நான் என்னை ஈசியாக பார்த்துக் கொள்வேன்” என விளக்கமளித்திருந்தார் சமந்தா.
இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவிடம் அவரது மேலாளர் பண மோசடி செய்துள்ளதாகக் கூறப்பட்டது. நீண்ட காலமாக பணியாற்றிய அந்த மேலாளர், ரூ. 80 லட்சம் மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.