தமிழ் சினிமாத் துறையில் முதன் முதலாக சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படபிடிப்பில் க்ரேன் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் கிருஷ்ணா, மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்த விபத்தினால் திரைத்துறையில் இனி கதாநாயகன் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை இன்சுரன்ஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டன. படபிடிப்பு தளத்தில் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துகள் வந்தன.
மாநாடு படத்தின் ஹீரோவும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இனி இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெற கூடாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது 'மாநாடு' படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்துள்ளார். 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் ப்ரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாயாகும். இந்த முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.