நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஐந்தாம் தேதி காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெறுகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர்.
அதேபோல் நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து முந்தைய நாள் இரவு சென்னை அழைத்துவரப்பட்ட நடிகர் விஜயை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விஜய் வீட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்று மாலை முடிவடைந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஜயின் இல்லத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பிகில் படத்திற்காக பெற்ற சம்பளம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விஜய் வீட்டிலிருந்து எந்த ரொக்கமும் வருமான வரித்துறையினருக்கு கிடைக்கவில்லை, இது ஒரு சாதாரண விசாரணை என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது வருமான வரித்துறை.
இந்நிலையில் வருமான வரிச்சோதனை முடிவடைந்த பிறகு நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.