Skip to main content

‘குட் பேட் அக்லி படத்திலும் அவர் இருக்கிறார்...’ - ஆதிக் ரவிச்சந்திரன்

Published on 03/12/2024 | Edited on 03/12/2024
Adhik Ravichandran shares an update Good Bad Ugly movie

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சூது கவ்வும்’. நலன் குமாரசாமி இயக்கியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சூது கவ்வும் 2’ படத்தை எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்க அவருடன் இணைந்து கருணாகரன், ராதா ரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சி.வி.குமார் தயாரிப்பில் இப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் இணைந்து இயக்குநர்கள் பா. ரஞ்சித், நலன் குமாரசாமி, ஆதிக் ரவிச்சந்திரன், கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின்போது ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், “சூது கவ்வும் படம் மாஸ்டர் பீஸாக இருந்தது. நான் திரையரங்களில் அந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சி பார்த்தேன். அந்த படத்தை நலன் குமாரசாமியும், சி.வி.குமார் ஆகியோர் இணைந்து எடுக்கவில்லையென்றால் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜூனுக்கு ‘சூது கவ்வும் 2’ படம் கிடைத்திருக்காது. அர்ஜுனுக்கும் எனக்கும் உள்ள டிராவல் பிரபு தேவாவிடமிருந்து தொடங்கியது.

என்னுடைய மார்க் ஆண்டனி படத்தின் கதை எழுதும் போது அர்ஜூன் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அந்த படத்தின் வெற்றி எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவருக்கும் அதில் பங்குண்டு. அதைத்தொடர்ந்து இப்போது என்னுடைய இயக்கத்தில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதை எழுதுகிற குழுவிலும் அர்ஜூன் இருக்கிறார். அர்ஜூனுக்காகத் தான் இந்த நிகழ்வில் பங்கேற்றேன். சூது கவ்வும் 2 மிகப்பெரிய வெற்றியடைய படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

சார்ந்த செய்திகள்