90களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை ஷோபனா. மேலும் பரதநாட்டியக் கலைஞராகவும் இருந்து வருகிறார். சென்னை தேனாம்பேட்டையில் இரண்டடுக்கு மாடிகொண்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். தரைத்தளத்தில் பரத நாட்டியப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஷோபனா, முதல் தளத்தை தாயார் ஆனந்தத்துக்கு கொடுத்துவிட்டு, இரண்டாம் தளத்தில் வசித்து வருகிறார்.
ஷோபனா வீட்டில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த விஜயா என்ற பெண் கடந்த ஒரு வருடமாக வீட்டில் தங்கி அவரது தாயாரைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, முதல் தளத்தில் வசிக்கும் தாயார் ஆனந்தம் வைத்திருந்த பணம் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். மேலும் வீட்டின் பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஷோபனா வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். விஜயா, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக ரூ.41 ஆயிரம் வரை திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய பணத்தைக் கார் ஓட்டுநர் முருகன் மூலம் ஆன்லைன் வாயிலாக ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியுள்ளார்.
பின்பு வறுமையின் காரணமாகத் திருடியதாகத் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஷோபனா புகாரை வாபஸ் பெற்றார். பின்னர் விஜயாவையே பணிப்பெண்ணாக நியமித்து திருடிய பணத்தைச் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், பணிப்பெண் தங்க நகைகள், வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட 60 சவரனுக்கு மேல் திருடியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.