லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்
நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம், கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சபிதா ராயை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விக்ரம் பட அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”விக்ரம் ஆடியோ லான்ச்சில் மேடையேறுவோம் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. விழா முடிந்தது கிளம்பலாம் என்று நினைத்தபோது முக்கியமான இன்னும் சிலரை மேடைக்கு அழைக்க போகிறோம் என்றார்கள். யாரையோ கூப்பிடப்போகிறார்கள் என்று நினைத்து நாங்கள் உட்கார்ந்தோம். எங்களை மேடைக்கு வரச் சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. எங்களை மாதிரி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு அது ரொம்ப பெரிய விஷயம். யாருமே செய்யாத விஷயத்தை கமல் சார் செய்தார்.
சின்ன வயசிலேயே ஒருமுறை கமல் சாரை பார்த்திருக்கிறேன். என்னுடைய அம்மா கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதால் காதலா காதலா படத்தில் நடிக்கச் செல்லும்போது என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது என்னை மடியில் உட்கார வைத்து ரொம்ப நேரம் பேசினார். அப்போது எடுத்த ஒரு போட்டோகூட என்னிடம் உள்ளது. சமீபத்தில் அவரிடம் அதைச் சொன்னபோது அப்படியா, அந்தப் பொண்ணா நீங்க என்று கேட்டார். ராஜ்கமல் நிறுவன படத்தில் நடிக்க அக்ரிமெண்டில் கையெழுத்து போடும்போதே எனக்கு கை நடுங்கியது.
விக்ரம் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை பார்த்தபோது இன்னும் பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நல்லா இருந்துருக்குமே என்று நினைத்தேன். பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கணுமா என்று யோசித்து விக்ரம் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். அதே நேரத்தில் பெரிய படத்தில் நடித்தால் நிறைய பேருடைய அறிமுகம் கிடைக்கும் என்பதால் சரி நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இன்றைக்கு எல்லா பக்கமும் விக்ரம் படத்தை பற்றித்தான் பேசுகிறார்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பேன்”. இவ்வாறு சபிதா ராய் தெரிவித்தார்.