ரச்சிதா ராம், கன்னட திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் இவர் புதிதாக நடித்துள்ள திரைப்படம் 'கிராந்தி'. ஹரிகிரிஷ்ணா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற குடியரசு தினமான 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறது படக்குழு.
இதனிடையே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை ரச்சிதா ராம், "வரும் 26ம் தேதி குடியரசு தினம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த முறை அதை மறந்துவிட்டு கிராந்தி கொண்டாட்டமாக இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார். இது குடியரசு தினத்தை அவமதிப்பதாக இருக்கிறது எனக் கூறி சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடக மாநில அறிவியல் ஆய்வு கழகத்தின் தலைவர் சிவலிங்கையா என்பவர் மாண்டியாவில் உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில். "நடிகை ரச்சிதா ராம் குடியரசு தினத்தை மறந்து கிராந்தி படத்தை கொண்டாடுங்கள் என்று பேசியிருப்பது, குடியரசு தினத்தை அவமதித்துள்ளதாக அமைந்துள்ளது. மேலும் இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.