பாவனா வழக்கிற்கு பிறகு அந்தச் சங்கம் இரண்டாக உடைந்தது. இருந்தாலும் இந்தச் சங்கத்தில் தொடர்ந்து இயங்கி வந்தார் பார்வதி. இதன்பின் 'ட்வெண்டி 20' என்ற திரைப்படத்தை தயாரித்தது அம்மா சங்கம். அதன் இரண்டாம் பாதியை தயாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்திலும் பாவனா நடிப்பாரா என்று அம்மா சங்கத்தின் பொதுச்செயலாளர் எடவேலா பாபுவிடம் அண்மையில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாவானா, அம்மாவில் தற்போது இல்லை. முதல் பாகத்தில் சிறப்பாகப் பணியாற்றியிருந்தார். ஆனால், இறந்த ஒன்றை மீண்டும் கொண்டுவருதல் சரியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பார்வதி ஃபேஸ்புக்கில் மிகவும் கோபமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “2018 -ஆம் ஆண்டு, என்னுடைய நண்பர்கள் பலர் அம்மாவில் இருந்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு சிலராவது உடைந்துபோன அமைப்பை சீர்படுத்த அங்கே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், சமீபத்தில் பாபு பேசிய அந்த வார்த்தைகள், என்னுடைய அனைத்து நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டது. இந்த அமைப்பால் முழுமையாக ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணை, இறந்தவருக்கு சமமாகக் கூறுவது அறுவருக்கத்தக்கதாக இருக்கிறது. இந்த அமைப்பில் இருந்து விலகுகிறேன். இது போன்ற மோசமான கருத்துகளைப் பதிவு செய்த பாபு பதவி விலக வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இந்தக் கருத்துகளைக் கண்டித்து சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக நடிகை பார்வதி ஏற்கனவே அறிவித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் பார்வதியின் ராஜினாமாவை சங்கம் ஏற்றுக்கொண்டது. மேலும், எடவேல பாபுவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் சங்கம் அறிவித்துள்ளது.