‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. கர்நாடகாவைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் நடித்துள்ளார். இதுவரை 500 படங்களுக்கும்மேல் நடித்துள்ள ஜெயந்தி, ஏழுமுறை கர்நாடக அரசின் மாநில விருதும் இருமுறை ஃபிலிம்ஃபேர் விருதும் வென்றுள்ளார்.
சினிமாவிலிருந்து விலகி கர்நாடகாவில் வசித்துவந்த ஜெயந்தி, நீண்ட நாட்களாகவே ஆஸ்துமா தொந்தரவினால் அவதிப்பட்டுவந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று (26.07.2021) மரணமடைந்தார். நேற்று இரவு உணவை முடித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்ற ஜெயந்தி, இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போதே மரணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் ஜெயந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.