திரைப்படத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பழம் பெரும் இந்தி நடிகையான ஆஷா பரேக்குக்கு வழங்கப்பட உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ள 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஆஷா பரேக் விருது பெறவுள்ளார்.
குஜராத்தை பூர்விகமாக கொண்ட ஆஷா பரேக், 1960 மற்றும் 1970களில் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கடைசியாக 1995ஆம் ஆண்டு வெளியான 'அந்தோலன்' படத்தில் நடித்திருந்தார். பின்பு 1999ஆம் ஆண்டு வெளியான சார் ஆன்கோன் பர் (Sar Aankhon Par) படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் ஆஷா பரேக். ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிற பத்மஸ்ரீ விருதை 1992ஆம் ஆண்டிற்காக ஆஷா பரேக் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.