'சின்ன கலைவாணர்', 'ஜனங்களின் கலைஞன்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக், 19ஆம் தேதி நவம்பர் 1961ல் கோவில்பட்டியில் பிறந்தார். இவர் 1987ல் வெளியான கே.பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் 'புது புது அர்த்தங்கள்' படம் மூலம் பிரபலமானார். இப்படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. பிறகு, 1990களின் தொடக்கத்தில் இருந்து துணைநடிகராக தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் 1997களின் இறுதியிலிருந்து மீண்டும் பிரபலமாக மாற ஆரம்பித்தார்.
அந்தச் சமயம் இவர் நடிப்பில் வெளியான 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'பொங்கலோ பொங்கல்', 'காதல் மன்னன்', 'சொல்லாமலே', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'கண்ணெதிரே தோன்றினால்', 'நினைவிருக்கும் வரை', 'பூமகள் ஊர்வலம்', 'விரலுக்கேத்த வீக்கம்', 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', 'ஆசையில் ஓர் கடிதம்' உள்ளிட்ட படங்கள் இவரை காமெடியில் மிகவும் பிரபலமடையச் செய்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கியது. இன்னும் ஒருபடி மேலே போய் 2002ல் வெளியான திருநெல்வேலி படத்தில், சமூகத்துக்குத் தேவையான சிந்திக்க வைக்கும் கருத்துகளை தன் காமெடி காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியதற்காகவே இவரை ரசிகர்கள் சின்ன கலைவாணர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
அதிலிருந்து இன்று வரை பெரும்பாலான படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சீர்திருத்தும் நோக்கோடு எழுதப்படும் நையாண்டியைச் சிறப்பாகச் செய்து மக்களை மகிழ்விக்கத் தொடங்கினார். சமூக கொடுமைகளுக்கு எதிரான வசனங்களை தன் காமெடி மூலம் ரசிகர்களைச் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தார். அந்தச் சமயம் இவர் நடிப்பில் வெளியான 'ரன்', 'சாமி', 'பேரழகன்' உள்ளிட்ட படங்கள் இவருக்கு மூன்று ஃபிலிம்பேர் சிறந்த காமெடி நடிகர் விருதுகளைப் பெற்றுத் தந்தன. மேலும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஐந்து தமிழ்நாடு திரைப்பட விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டன. மேலும் 2006ம் ஆண்டு கலைவாணர் விருதும், 2009ஆம் இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டது.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்ற நடிகர் விவேக் இந்த கால இடைவெளியில் நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், பிரஷாந்த், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால், கார்த்தி, மற்றும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹரிஷ் கல்யாண் வரை பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இருந்தும் அவருக்கு நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்டகால ஆசை இருந்துவந்தது. இதை அவர் பல மேடைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். அது இதுநாள் வரை நிறைவேறாமலே இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க விவேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. விவேக்கும் கமலுடன் முதல்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமலின் அரசியல் பிரவேசம், ஷங்கர் தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்கச் சென்றது எனப் பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இந்த திடீர் மறைவால் அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா என்பது தற்போது கேள்விக்குறியாகிவிட்டது.
இருந்தும் விவேக்கின் ஆசை நிறைவேற கடைசியாக ஒரு வாய்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது. அதுவும் கமல் - ஷங்கர் இருவரும் மனது வைக்கும் பட்சத்தில் இதுவரை கமலுடன் விவேக் நடித்த காட்சிகளை 'இந்தியன் 2' படத்தில் பயன்படுத்தி விவேக்கின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றலாம். அதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!