சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், கூகை திரைப்பட இயக்கம் 'ஜெய் பீம்'
திரைப்பட குழுவினரோடு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைத்தது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் தமிழ் பேசுகையில், "நான் காவல்துறையில் 12 ஆண்டுகள் வேலை பார்த்தேன். பின், அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் வந்தேன். இன்றைக்கு தமிழ் சினிமாவில் 100 கோடி, 150 கோடி என பந்தயம் போய்க்கொண்டு இருக்கிறது. அதில் எதிலும் கலந்து கொள்ளாமல் இந்தக் கதையில் நடிக்க சூர்யா அண்ணன் ஒப்புக்கொண்டார். ஜெய் பீம் கதை இன்றைக்கு பிரம்மாண்டமான கதையாகத் தெரியலாம். ஆனால், அன்றைக்கு அவர் கதை கேட்கும்போது அது சாதாரண கதைதான். தா.செ.ஞானவேலின் நான்கு வருட உழைப்பு இந்தப் படம். இந்தக் கதையில் எத்தனை வருடம் உழைத்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது நான்கு வருடங்கள் என்றார். இந்தப் படத்தில் நான் சிறப்பாக நடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். நல்ல நடிப்பு என்பது நடிகரின் நடிப்பினால் வந்துவிடுவது அல்ல. கதை தேர்வில்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்தமான நடிகர் என்றால் பசுபதி அண்ணன்தான். ஆனால், பசுபதி அண்ணன் தன்னை சிறந்த நடிகராக நிரூபிக்க சார்பட்டா பரம்பரை என்ற ஒரு படம் வரவேண்டியுள்ளது. நான் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடித்திருந்தாலும் அவர்களை சிறப்பாக நடிக்க வைத்திருக்கும் இந்தக் கதை.
பழங்குடியின மக்கள் அமைப்பாக இல்லாமல் தனித்தனியே பிரிந்து இருக்கிறார்கள். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதியில் 7 குடும்பங்கள்தான் இருந்தன. தமிழ்நாடு முழுவதும் இப்படி பிரிந்துள்ள இவர்களுக்கு எங்கும் ஓட்டுரிமை இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வாசித்திருந்தால் அந்த ஏரியா கவுன்சிலர், எம்.எல்.ஏ அனைவரும் வாக்கிற்காக அங்கு சென்று நின்றிருப்பார்கள். இப்படி எந்த அமைப்பும் இல்லாத மக்களைப் பற்றி பேசிய முதல் தமிழ் சினிமா ஜெய் பீம்தான். இரண்டு மணிக்கு இயக்குநரிடம் கதையை வாங்கிவிட்டு வந்து படித்தேன். ஐந்தரை மணிக்கு இயக்குநரிடம் சென்று திருப்பிக் கொடுத்துவிட்டேன். என் வாழ்க்கையில் நான் கீழே வைக்காமல் முழுவதுமாக படித்த கதை இந்தப் படத்தின் கதைதான். படித்துக் கொண்டிருக்கும்போதே நான் அழுதுவிட்டேன். படித்த பிறகு இந்தப் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.
நான் இயக்கிய டாணாக்காரன் படத்தின் பணிகள் முடிந்துவிட்டன. அடுத்த படத்திற்கான வேலையை தற்போது ஆரம்பித்துள்ளேன். இந்த நேரத்தில் நடிக்க வேண்டுமா அல்லது படம் இயக்கத்திலேயே கவனம் செலுத்தலாமா என்று யோசித்தேன். எனக்கு நடிப்பு என்றாலே அலர்ஜிதான். வெற்றிமாறன் அண்ணன்தான் நீ நடிடா என்று எப்போதுமே என்னைச் சொல்லிக்கொண்டே இருப்பார். பின், இந்தக் கதையில் நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். நடிக்கும்போது தம்பி மணிகண்டனை நிறைய அடித்தேன். 7 நாட்கள் அடித்துக்கொண்டே இருந்தேன். ஆனால், ஒருநாள்கூட அடித்தது வலிக்கிறது என்று அவர் சொல்லவே இல்லை. நான் வலிக்கிறது என்று கூறியிருந்தால் நீங்கள் அப்படி அடித்திருக்கமாட்டீர்கள் என்று படப்பிடிப்பெல்லாம் முடிந்த பிறகு என்னிடம் சொன்னான். ஞானவேல் அடிக்கடி வந்து கையைப் பிடித்துக்கொண்டு தமிழ் அவங்க நம் மக்கள் அடிச்சிடாதீங்க என்பார். எனக்கு பயமாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் மாஸ்டர், தமிழ் இப்படி அடித்தால் அடித்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். நாலு அடி நறுக்குன்னு அடிச்சிட்டு வாங்க என்பார். எதைக் கேட்டு நடிப்பது என்பது எனக்கே குழப்பமாக இருக்கும். ஒரு காட்சியில் நடிக்கும்போது செங்கேணி கையில் கடுமையாக அடித்துவிட்டேன். அந்தப் பொண்ணும் தொடர்ந்து நடித்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு பார்த்தால் அவருக்கு கை வீங்கிவிட்டது. பின், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அன்றைய இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நான் காவல்துறையில் பணியாற்றிய இத்தனை ஆண்டுகளில் யாரையும் கைநீட்டி அடித்ததில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி பேசும்போதுதான் ஒரு படம் சிறந்த படமாகவே மாறுகிறது. இந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் அமுக்கப்பட்ட மக்களைப் பற்றி பேசும்போதுதான் ஒரு படம் சிறந்த படமாகிறது" எனக் கூறினார்.