Skip to main content

"தந்தை சிலை செய்தார்; மகன் நிலை செய்தார்" - வைரமுத்து ட்வீட்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

actor sivaji ganesan 95th birthday vairamuthu tweet

 

தமிழ் சினிமாவின் பிதாமகனாக போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள், சிவாஜி குடும்பத்தினர், வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

இந்நிலையில் வைரமுத்து, சிவாஜி சிலைக்கு மரியாதை செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மக்கள் பார்வையில் படும்வண்ணம் சிவாஜி சிலையை மீட்டெடுத்து நிர்மாணித்த தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். தந்தை சிலை செய்தார்; மகன் நிலை செய்தார்" என குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2006ஆம் ஆண்டு, முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர், சென்னை கடற்கரை காமராஜர் சாலை, நடிகர் சிவாஜி கணேசனுக்கு முழு உருவ சிலை அமைத்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி  சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என வழக்கு தொடர்ந்த நிலையில் சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில், அந்த சிலையை அகற்றினால், காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் சிலையை அகற்றத் தடையில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு அந்த சிலை அகற்றப்பட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்