சூது கவ்வும் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். மேலும் கருணாகரன், ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘சூது கவ்வும் 2’ படக்குழுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது சிவா படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவரிடம் கங்குவா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சர்ச்சையாகிய விமர்சன விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஒரு படத்தை பார்த்து அதை பற்றி விமர்சிக்கிற எல்லா உரிமையும் பார்ப்பவர்களுக்கு இருக்கிறது. ஒரு தவறான விமர்சனத்தால் ஒரு படம் ஓடாமல் இருப்பதில்லை.
ரிவியூவர்ஸ்களுக்கு பிடிக்காத நிறைய படங்கள் நல்லா ஓடியிருக்கு. அதே சமயம் ரிவியூவர்ஸ்களுக்கு ரொம்ப பிடித்த படங்கள் நல்ல வசூல் கிடைக்காமல் இருந்திருக்கு. இதை வைத்தே இது சரியானது கிடையாது என்பது. நமக்கு தெரிகிறது. விமர்சனம் செய்வது உங்கள் விருப்பம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது சரியாக இருக்கும்” என்றார்.