Skip to main content

எதார்த்தமாக விவேக் சொன்ன வசனம்... வாய்விட்டு சிரித்த இளையராஜா! 

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

vivek

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-டியூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில்,சின்ன கலைவாணர் விவேக் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

அண்மையில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக், மிகப்பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அவரது மரணம் குறித்து பல வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதை உண்மையின் கரங்களிலேயே நாம் ஒப்படைத்துவிடுவோம். விவேக் சினிமா நடிகராக பிறந்தபோது நான் பத்திரிகையாளராக பிறந்திருந்தேன். நான் பத்திரிகையாளர் பணியை தொடங்கிய காலகட்டத்தில்தான் அவர் நடித்த மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் படங்கள் வெளியாகின. பத்திரிகையாளர்களுக்கான காட்சியிலேயே அவர் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, இவர் பெரிய நடிகராக வருவார் என கணிக்கக்கூடிய அளவிற்கு  அவர் நடிப்பு இருந்தது. 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் மூலம் மக்களுடைய மனதில் முதல் அச்சாரம் போட்டு அமர்ந்தார். அதன் பிறகு, அவர் நடிகராக வளர்ந்தார்; நான் பத்திரிகையாளராக வளர்ந்தேன். 

 

விவேக்கை பொறுத்தவரை அனைவரையும் சிரிக்க வைக்கவேண்டும் என நினைப்பர். அதற்காக பயங்கரமாகக் கேலி செய்வார். அவர் தவறான நோக்கம் கொண்டவராக இல்லாவிட்டாலும்கூட இந்தக் காரணத்திற்காக சிலர் அவரிடமிருந்து விலகியே இருந்தார்கள். நம்மையும் கலாய்த்துவிடுவார் என்று நினைத்து நான்கூட அந்தக் காலகட்டத்தில் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தேன். நான் பத்திரிகையாளராக பணியாற்றிய அதே காலத்தில் ஆர்.பி.உதயகுமார் சாரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் 'நந்தவன தேர்' படத்தில் ஹீரோவின் நண்பர்களாக வடிவேலும் விவேக்கும் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் நான்தான் வசனம் சொல்லிக்கொடுப்பேன்.  பேப்பரில் உள்ள வசனங்களை அவர்களுக்குள்ளாகவே பேசி, நாம் எழுதியைவிட சிறப்பான ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். அவர்கள் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு வசனத்தைப் படிப்பதைப் பார்க்கும்போதே இவர்கள் இருவரும் தமிழ்சினிமாவில் மிகப்பெரிய உச்சத்திற்கு வருவார்கள் எனத் தோன்றியது.

 

முகபாவனையுடன் கூடிய நகைச்சுவையை வடிவேலு வெளிப்படுத்தி ஒரு பாதையில் பயணித்தால், அதிரடியான சின்னச்சின்ன வசனங்கள் மூலம் அனைவரையும் சிரிக்கவைத்து மற்றொரு பாதையில் விவேக் பயணித்தார்.  நந்தவன தேர் படத்திலிருந்தே ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். கதாநாயகன் மாமா, கதாநாயகன் வீட்டிற்கு வருவார். கதாநாயகன் வீட்டு வாசலில் இருந்த விவேக், அவரை வரவேற்றுவிட்டு அவருக்காக டீ வாங்கச் செல்வார். டீ வாங்கச் சென்ற விவேக் திரும்பிவர நேரமாகிவிடும். இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் உள்ளே வீட்டிற்குள் சென்ற கதாநாயகன் மாமா, உள்ளே ஒரு சம்பவத்தைப் பார்த்துக் கண்கலங்கி வெளியே வருவார். டீ வாங்கச் சென்ற விவேக்கும், சரியாக அப்போது திரும்பிவருவார்.  விவேக் அவரிடம் டீயை நீட்ட, அவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு அழுதபடியே சென்றுவிடுவார். உடனே விவேக், என்ன சார்... கொஞ்சம் லேட் ஆகிறுச்சு... அதற்காக கோவிச்சுட்டு குடிக்கமாக அழுதுட்டு போறீங்களே என்பார்.  விவேக் இதை சொல்லி முடித்ததும் செட்டில் இருந்த அனைவரும் கைதட்டி சிரித்தனர். இந்த வசனம் பேப்பரில் இல்லை. இதேபோல நடிக்கும்போது எதார்த்தமாக அவர் கூறிய பல வசனங்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளன. அந்தக்காட்சி பின்னணி இசைக்கு போகும்போது இசைஞானி இளையராஜா வாய்விட்டுச் சிரித்தார். ஆரம்பத்தில் இப்படி காமெடி பண்ணிக்கொண்டிருந்த விவேக், பிறகு சமூக அக்கறையுடைய கருத்துகளை காமெடிகளில் பயன்படுத்த ஆரம்பித்தார். சமூக அக்கறை கொண்ட கருத்துகள், படிப்பின் அவசியம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றையெல்லாம் தீவிரமாகப் பேசினார். அப்துல்கலாம் ஐயாவை பின்பற்ற ஆரம்பித்த பிறகு, மரங்கள் நடத்தொடங்கினார். இதுவரை 28 லட்சம் மரங்கள் நட்டுள்ளார். அவரது இலக்கு ஒரு கோடி மரங்கள்; அதற்குள் அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது. 

 

Actor Senthilkumaran

 

எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கிய விவேக், படிப்படியாக வளர்ந்து மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துவிட்டார். பத்திரிகையாளர், உதவி இயக்குநர் என வாழ்க்கையைத் தொடங்கிய நானும் இன்று நடிகராகிவிட்டேன். ஆரம்பத்தில் நான் நடித்த படங்களெல்லாம் எமோஷனல் படங்களாக இருந்தன. இனி  கொஞ்சம் வித்தியாசமாக நடிக்கலாம் என்று நினைத்தபோது, காமெடி கதாபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. விவேக்குடன் இணைந்து நடிக்கவேண்டும் என்றவுடன் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். அப்படி அமைந்த படம்தான் 'தாராள பிரபு'. அந்த படத்தில் நான் நடித்த ஒரு காட்சிக்கு விவேக் கைதட்டினார். அதை பார்த்தவுடன் நந்தவன தேர் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அவருக்கு கைதட்டிய நினைவுகள் கண்முன் வந்துபோயின. மற்றவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுக்க வேண்டும், மற்றவர்களுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக விவேக் இருந்ததை நினைக்கும்போதே நெகிழ்ச்சியாக உள்ளது.

 

படப்பிடிப்பு தளத்தில் ஒருநாள் வெயில் அதிகமாக இருந்தது. எங்கள் பக்கத்தில் ஏர் கூலர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இருந்தும், அதிக வெக்கையாக இருந்தது. இதை நடிகர் ஹரிஷ் கல்யாண் சொன்னதும், இதற்குத்தான் மரம் நட வேண்டும் எனக் கூறுகிறோம் என அடுத்த நொடியிலேயே கூறினார். நான் உடனே, மரம் நடுவது இன்று பேஷனாகிவிட்டது. மரம் நடுவதில்தான் அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். அதை எப்படி வளர்ப்பது என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை என்றேன். நீங்க சொல்வது சரிதான் என்று சொல்லி என் கையைப்பிடித்த விவேக், எந்தஎந்த மரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என விரிவாக விளக்கினார். அதையெல்லாம் கேட்ட பிறகு, எந்த அளவிற்கு இந்த விஷயங்களை அவர் நேசித்து செய்கிறார் என்பதை தெரிய முடிந்தது. அவரது மரணத்தை சின்ன கலைவாணர் பெரிய கலைவாணருடன் ஐக்கியமான நிகழ்வாகத்தான் பார்க்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்