செந்தூர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கதிர்வேலு இயக்கத்தில், சசிகுமார், நிக்கி கல்ராணி, சதீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படத்தின் நாயகன் சசிகுமாரோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக உரையாடினோம். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"நான் எந்த ஊருக்கு சென்றாலும் மக்கள் அண்ணன், தம்பி என்றுதான் என்னை அழைக்கிறார்கள். அவர்கள் யாரும் என்னை நடிகராக பார்ப்பதில்லை. நானும் அவர்களுடன் அப்படித்தான் பேசுவேன். ராஜவம்சம் திரைப்படம் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்டான படம். நிறைய ஆர்ட்டிஸ்ட் நடிச்சிருக்காங்க. கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும் படமாக இந்தப் படம் இருக்கும். கிராமத்தில் இருந்து வந்து ஐடியில் வேலை பார்க்கும் இளைஞனாக நான் நடித்திருக்கிறேன். குடும்பமாக வந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக ராஜவம்சம் இருக்கும். சீரியசாக இல்லாமல், எந்த திருப்பமும் இல்லாமல், யோகி பாபு, சிங்கம் புலி, தம்பி ராமையா, மனோபாலா என நட்சத்திரங்கள் நிறைய பேர் உள்ளதால் ஜாலியான படமாக இருக்கும். படம் முடிந்து திரும்பும்போது ஜாலியான ஒரு படம் பார்த்த நிறைவு இருக்கும்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் படம் இயக்க முடியவில்லை. நிறைய பேர் அது பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே அடுத்தாண்டு நிச்சயம் ஒரு படம் இயக்குவேன்".