கர்நாடக மாநிலம் தனி மாநிலமாக உதயமாகி 67-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த விழாவைக் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலத் தலைமைச் செயலகத்தில் நேற்று (01/11/2022) மாலை 04.00 மணியளவில் நடைபெற்ற அரசு விழாவில் கர்நாடக அரசின் மிக உயரிய விருதான 'கர்நாடக ரத்னா’ விருது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சமூக சேவை மற்றும் கலைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்ததற்காக, அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து விருது வழங்க, அதனை புனித் ராஜ்குமாரின் மனைவி பெற்றுக் கொண்டார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில அமைச்சர்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கன்னடத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று ராஜராஜேஸ்வரியிடமும், அல்லாவிடமும், ஏசுவிடமும் கேட்டுக் கொள்கிறேன். அப்பு கடவுளின் குழந்தை. அந்த குழந்தை நம்முடன் சில நாட்கள் தங்கி விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தி மீண்டும் கடவுளிடம் சென்றுவிட்டது. புனித்துக்கு விருது வழங்கிய கர்நாடக அரசுக்கு அனைத்து ரசிகர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றார் முதலமைச்சர். அதேபோல், ஜூனியர் என்.டி.ஆருக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர், அனைவரும் முதலமைச்சருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.