Skip to main content

தன்னை பற்றி தவறாக எழுதிய பத்திரிகையாளரின் மகள்களுக்கு உதவிசெய்த விவேக்!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

rajesh

 

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொண்ணூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். 'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர்; நகைச்சுவையான நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.

 

தமிழ் மக்களால் 'சின்ன கலைவாணர்' என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். ஐந்துமுறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கலைவாணர் விருது, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது எனப் பல விருதுகளை வென்றவர் விவேக். முன்னர் நக்கீரனோடு நடந்த ஒரு கலந்துரையாடலில் நடிகர் விவேக் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் மூத்த நடிகர் ராஜேஷ். அவை பின்வருமாறு...

 

நடிகர் விவேக் எத்தகைய உயர்ந்த குணங்கள் கொண்ட மனிதர் என்று நடிகர் குமரிமுத்து கூறியதைக் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் என்னிடம் கூறியவற்றை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன். ஒருமுறை நடிகர் விவேக்கை தொடர்பு கொண்ட குமரி முத்து, "எனக்கு மலேசியாவில் நாடகம் இருக்கிறது அண்ணா... நீங்கள் நாடகத்திற்கு வந்தால், எனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும்... நீங்கள் வரமுடியுமா? என்று கேட்டுள்ளார். உடனே விவேக், "எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித்தருகிறேன் என்று குமரி முத்து உறுதியளிக்க, நடிகர் விவேக்கும் சரி வருகிறேன் எனச் சம்மதம் தெரிவிக்கிறார். 

 

அதன்பிறகு, அனைவரும் மலேசியா செல்கின்றனர். நாடகம் நல்லபடியாக முடிகிறது. நாடகம் முடிந்து அனைவரும் தங்கியிருந்த ஓட்டலில் வைத்து குமரி முத்து முன்னர் பேசியபடி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து விவேக்கிடம் கொடுக்கிறார். உடனே விவேக், உங்களுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார். ஆம்.. வந்துவிட்டது அண்ணா எனக் குமரிமுத்து கூறியவுடன் அந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் குமரி முத்துவிடம் கொடுத்துள்ளார். குமரி முத்து ஏதும் புரியாமல் நின்றுள்ளார். இந்த இரண்டு லட்சம் பணத்தை வைத்து உங்கள் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள் என விவேக் கூறியதைக் கேட்டு குமாரி முத்து கண்கலங்கிவிட்டாராம். பெயரில் மட்டும் சின்ன கலைவாணர் இல்லை, செயலிலும் தான் சின்ன கலைவாணர் என்பதை விவேக் நிரூபித்துவிட்டார்.  

 

அதுபோல இன்னொரு சம்பவத்தையும் குமரி முத்து என்னிடம் கூறினார். ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து விவேக்கை பற்றி தவறாக எழுதி வந்துள்ளார். அதை விவேக்கும் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த பத்திரிகையாளர் மரணமடைந்துவிடுகிறார். அந்தப் பத்திரிகையாளருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும், அந்தக் குழந்தைகளின் பெயரில் வங்கியில் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்தாராம். 

 

ஒரு முறை என்னுடைய பேட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு என் வீட்டிற்கே வந்து என்னைப் பாராட்டினார். இவ்வளவு பெரிய புகழ் பெற்ற நடிகராக இருந்தும் அடுத்தவர்கள் திறமையைப் பாராட்டும் நல்ல குணம் அவரிடம் இருந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்