தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியதோடு, முழுநேரமாக நடிப்பில் இறங்கியவர் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து. இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக கடந்த வருடம் நடிகர் மாரிமுத்துவை பேட்டி கண்டோம். அப்போது தமிழ் மொழி குறித்து அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டியில் கூறியதாவது, “எனக்கு ஒட்டு மீசை, ஒட்டு தாடி, முடி வைக்கிறதெல்லாம் பிடிக்காது. அந்த சினிமா நான் கற்றுக் கொள்ளவில்லை. இந்த வழுக்கை மண்டைக்கு ஏற்ற என்ன கதாபாத்திரமோ அதைத்தான் ஏற்று நடிப்பேன். தாடி வேண்டுமானால் நான் ஒரு வாரம் வளர்த்து அதற்கு பிறகு நடிப்பேன். நான் சினிமா கற்றுக் கொண்டதெல்லாம் இயக்குநர் வசந்த், இயக்குநர் மணிரத்னம் போன்ற நிஜ சினிமா செய்கிறவர்களிடமிருந்து தான்.
அதோடு என்னுடைய யதார்த்தமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என்பது என்னுடைய தேனி மாவட்டத்தில் சின்ன கிராமத்தில் நான் எப்படி இருந்து வந்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறேன். அப்படியே பேசுறேன். மொழியை எல்லாரும் மறந்துட்டாங்க என்பது தான் எனது ஆதங்கம். மத்தபடி கதாநாயகனோட அப்பா, கதாநாயகியோட அப்பா போன்ற என் உடலுக்கு தகுந்த மாதிரியான கதாபாத்திரம் தான் தேர்வு செய்வேன்” என்றார்.