சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (28.11.2021) நிறைவடைந்தது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன.
இதையடுத்து, 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் நடத்தப்பட்ட BRICS திரைப்பட விழாவில் ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது 'அசுரன்' படத்திற்கும், அதில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
An absolute honour 🙏🙏🙏 pic.twitter.com/DBPo5mTJGV — Dhanush (@dhanushkraja) November 28, 2021