ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'அத்ரங்கி ரே' படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘கலாட்டா கல்யாணம்’ என்று படக்குழு பெயர் வைத்துள்ளது. கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஹாட்ஸ்டாரில் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.
சமீபத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், தனக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும், அது ஒரு அழகான மற்றும் தெய்வீகமான கலை. சமையலைத் தாண்டி எனக்கு மிகவும் பிடித்தது இசைஞானி இளையராஜாவின் இசை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். இளையராஜா சார்தான் என் கடவுள், அம்மா, தாலாட்டு எல்லாமே. படம் இயக்குவதில் எனக்கு அதிக விருப்பம். ஏனெனில் ஒரு படம் எவ்வளவு விருதுகளையும், பாராட்டுகளையும் வென்றாலும் அது அனைத்தும் இயக்குநருக்கே சொந்தமானது. அதனால் நான் இயக்குநராகவே விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.