இயக்குனர் சேரன் இயக்கத்தில், நடிகர் முரளி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான படம் 'வெற்றிக்கொடிகட்டு'. அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியவர் பெஞ்சமின். அதனைத் தொடர்ந்து, 'திருப்பாச்சி', 'பகவதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது சேலத்தில் வசித்து வரும் இவருக்கு, கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து, சிகிச்சைக்காக பெங்களூரு சென்ற இவர், அறுவைசிகிச்சைக்கு உதவி கோரி காணொளி ஒன்றை வெளியிட்டார். இந்தநிலையில், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள பெஞ்சமின், நக்கீரனோடு கீழ்கண்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
"கடந்த 14-ஆம் தேதி காலை எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சேலத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருநாள் சிகிச்சை எடுத்தேன். அதன்பிறகு, ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அவர்கள் கேட்ட தொகை என்னால் கட்டக் கூடியதாக இல்லை. சிகிச்சையின் போதுதான் எத்தனை அடைப்பு இருக்கும் எனத் தெரியவரும் என்றும் ஒரு அடைப்பை எடுக்க ஒரு லட்சம் வரை ஆகும் என்றார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதுதான் பெங்களூருவில் 'நாராயணா இருதயாலயா' பற்றி கூறினார்கள். தாமதிக்காமல் உடனே அங்கு சென்றோம். அப்போதுதான் அந்த காணொளி வெளியிட்டேன். அன்று இரவே அங்கு அனுமதிக்கப்பட்டேன். மறுநாள் காலை ஆஞ்சியோ செய்யப்பட்டது.
இரு அடைப்புகள் இருந்தன. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், எவ்வளவோ நபர்களை நீங்க சிரிக்க வச்சிருக்கீங்க.. நானும் உங்க ரசிகர்தான் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் 6 மருத்துவர்கள் இருக்கிறோம், எங்களுக்கான பணம் கட்ட வேண்டாம். மருத்துவமனைக்கான பணம் மட்டும் கட்டுங்கள் என்றார்கள். அங்கு எனது மருத்துவச் செலவு கிட்டத்தட்ட பாதி தொகையானது. டாக்டர் ஜே.கண்ணன், மௌலி மற்றும் அவர்கள் குழுவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
கடைசியாக ஒன்றரை லட்சம் பணம் தேவைப்பட்டது. ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு லட்சமும் சமுத்திரக்கனி அண்ணன் 50 ஆயிரமும் கொடுத்து உதவினர். சினிமாவைப் பற்றி மக்களிடம் தவறான பார்வை உள்ளது. விஜய் மற்றும் அஜித் சாருடன் நடித்துவிட்டதால் நிறைய பணம் சம்பாத்திருப்போம் என்று நினைக்கிறார்கள். அந்தப் படத்தில் எங்களுக்குத் தினசரி ஊதியம்தான். அது, 1,000 அல்லது 1,500 என சொற்பமாகத்தான் இருக்கும். என்னை மாதிரி எத்தனையோ ஆயிரக்கணக்கான நடிகர்கள் இதேபோல கஷ்டப்படுகிறார்கள். வேறு வேலைக்குப் போனாலும் நீங்கள் நடிகர், இந்த வேலைக்கு வரலாமா என்கிறார்கள்.
நடிகர் சங்கம் தற்போது செயல்படவில்லை. அது முறையாகச் செயல்பட்டு வந்திருந்தால் அவர்கள் தரப்பில் இருந்து உதவி கிடைத்திருக்கும். தற்போது டப்பிங் யூனியன் மட்டும் 10,000 பண உதவி செய்தார்கள். சினிமாக்காரன் என்றால் குடிச்சுட்டுக் கும்மாளம் போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஒரு சிலர் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படி இல்லை. படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் கலை நிகழ்ச்சி மூலம் ஏதாவது பணம் கிடைக்கும். கரோனா நேரம் என்பதால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போகிவிட்டது.
விஜய், அஜித்திற்கு என் நிலைமை தெரியாது. தெரிந்திருந்தால் அவர்களே தனியாளாக உதவி செய்திருப்பார்கள். திடீரென மாரடைப்பு ஏற்பட்டவுடன் என்ன செய்வது, யாரை அணுகுவதென்றே தெரியவில்லை. 'திருப்பாச்சி' படம் மூலம்தான் நான் வெளியே தெரிய ஆரம்பித்தேன். அதற்காக நடிகர் விஜய்க்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
மாரடைப்பு ஏற்பட்டவுடன் என் மனைவி துடித்துவிட்டார். ஒரு வாரமாக அவர் தூங்கவில்லை. நான் இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும். சிறிய குழந்தை 4-ஆவதும், பெரிய குழந்தை 8-ஆவதும் படிக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏதாவது நேர்ந்தால் அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும். என்னைக் காப்பாற்ற நிறைய போராடினார்கள். என்னுடைய மனைவி, அவருடைய அக்கா, தங்கை, என்னுடைய சகோதரி அனைவரும் மருத்துவமனை வாசலிலேயே நின்றனர். சினிமாக்காரர்கள் நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் குழந்தை, குடும்பம் உள்ளது. எங்களைப் பற்றி தவறாக எழுதாதீர்கள்" எனக் கண்ணீர் தேம்ப நம்மிடம் பேசினார்.