ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து டீசர், ட்ரைலர் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டீசர் மற்றும் ட்ரைலரில் என்கவுண்டர் பற்றி ரஜினிகாந்த் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் நடித்த அபிராமி, துஷாரா விஜயன் ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். இருவரும் இப்படம் தொடர்பான சுவாரஸ்யமான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது என்கவுன்டர் தொடர்பான கேள்வி குறித்து துஷாரா விஜயன் பேசுகையில், “இந்த படத்தில் என்கவுண்டர் பற்றிய கருத்து இருக்கிறது. அரசியல்வாதிகள் என்கவுன்டரை சரி என்றும் தவறு என்றும் அவரவர்களின் கருத்துகளை சொல்வார்கள். அவர்களைப் போல் நாம் சொல்ல முடியாவிட்டாலும் சாதாரண மனிதனாக சொல்லலாம். ஆனால் எனக்கு அதை பற்றி அந்தளவிற்கு பேசி அனுபவங்கள் இல்லை. ஒருவேளை எனக்கு சரி என்று பட்டது மற்றவர்களுக்கு தவறாக படலாம். அவர்களின் கருத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது” என்றார்.
அதே கேள்விக்கு அபிராமி பதிலளிக்கையில், “சமூகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தால் தனிப்பட்ட முறையில் அவரவர்களின் மனதில் மாற்றம் வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஒரு செயலைப் பார்த்து பயந்து மாற்றத்தை கொண்டு வர முடியாது. அப்படி பார்த்தால் சாலையில் போலீஸ் இருக்கும்போது ஒருவன் நன்றாக வண்டியை ஓட்டினால், போலீஸ் இல்லாத போது தவறாகத்தான் வண்டியை ஓட்டுவான். தவறாக ஓட்டினால் விபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயம் அவரவருக்குள் வர வேண்டும். இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்.