தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும் என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆர்த்தி, ஜெயம் ரவியின் விவாகரத்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஜெயம் ரவியின் இந்த முடிவு, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று, ஜெயம் ரவியை சந்திக்க பலமுறை முயற்சித்தும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்ப, ஜெயம் ரவி விவகாரத்து முடிவு எடுப்பதற்கு பெங்களூரை சேர்ந்த கெனிஷா என்ற பாடகிதான் காரணம் என பேசப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, “என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. கெனிஷா என்னுடைய நண்பர்” என விளக்கமளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆர்த்தியுனுடைய வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டுத்தர கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் ஆர்த்தி தற்போது மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி பொது வெளியில் நிறைய கருத்துகள் எழுகிறது. அதனால் நான் மவுனமாக இருப்பது என்னுடைய பலவீனமோ, குற்ற உணர்ச்சியோ அல்ல. நான் கண்ணியமாக இருக்க வேண்டும் எனவும் உண்மையை மறைத்து என்னை மோசமாகச் சித்தரிக்க நினைப்பவர்களுக்கு நான் பதிலளிப்பதை தவிர்க்கவும் மவுனமாக இருக்கிறேன். ஆனால் சட்டம் மூலம் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். எனது முந்தைய அறிக்கை பரஸ்பர ஒப்புதலின் மூலம் வெளியிடப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்து ஒருதலைபட்சமாக நடக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடல் அவருடன் நிகழும் என நம்புகிறேன். திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் உரையாடல்களில் நான் ஈடுபடமாட்டேன். என்னுடைய கவனம் என் குடும்பத்தின் நல் வாழ்வில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.