‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியது போன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
இந்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் லால் சிங் சட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவருடைய கடந்த வருட பிறந்தநாளன்று வெளியிட்டார் அமீர்கான். இப்படத்தில் அமீருடன் பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெறும் கரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்று மாதங்களாக சினிமா பட ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இனி அடுத்து எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்பதும் கேள்வியாக உள்ள நிலையில், அமீர்கான் தனது படத்தின் ஷூட்டிங்கை துருக்கியில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் துருக்கி சென்றபோது அங்கிருக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கி படப்பிடிப்பை தொடர்ந்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. இதனிடையே துருக்கி பாகிஸ்தானிற்கு ஆதரவு தரும் நட்பு நாடு. இந்நிலையில் ஆமீர்கான் துருக்கி அதிபர் மனைவியுடன் சந்தித்திருக்கும் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி அதிபரின் மனைவி எமைன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆமிர்கான் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார். இதனால் ஆமீர்கானின் நோக்கம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின வாழ்த்துகளையும் ஆமீர்கான் தெரிவிக்காததால் இந்த சந்திப்பு குறித்து பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். ஆமீர்கான் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.